search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசிக் கருவாடு"

    மாசி கருவாடு உண்பதால் நமது உடலில் சப்த தாதுக்களும் உண்டாகும். திருமணமான ஆண்களுக்கு மாசிக்கருவாடு உணவை தினம் கொடுப்பதற்கு காரணம் மருத்துவ குணம் தான்.
    நமது பாரம்பரிய உணவுகளில் பல்வேறுபட்ட உணவுகள் இருந்தாலும், அந்தந்த இடத்தில் உள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உணவுகள் உண்டு. பொதுவாக அனைவருக்கும் ஏற்ற உணவுகள் வரையறுக்கப்பட்டதாகும். அவற்றின் அறுசுவையை இலக்கணப்படுத்தி, அதிலே சித்த மருத்துவ முறைப்படி உணவுகள் வகுக்கப்பட்டது. இப்படி வகுக்கப்பட்ட உணவுகள் கீரையில் ஆரம்பித்து மீன்கள் வரை அடங்கும்.நாம் உணவுகளை எப்படி சமைக்க வேண்டும், உண்ண வேண்டும், எவ்வாறு உண்டால், என்னென்ன பலன் தரும் என்பதை நம் முன்னோர்கள் வகுத்து தொகுத்து அதற்கு சமையல் கலை என்கிற பெயர் சூட்டி, அதனை கல்வெட்டுகளிலும், ஓலைச்சுவடிகளிலும், நாய் தோல்களிலும், மரப்பட்டைகளிலும் பொறித்து வைத்தனர்.

    இப்படி வகுக்கப்பட்டதில் அன்றாட உணவில் கூழ், களி, மற்றும் நீராகாரம் என்பது தற்போது மறைந்து விட்டது. இந்த நீராகாரம் என்பது நிசித் தண்ணீர் என்றும் அழைக்கப்பட்டது. நிசி என்றால் பிராணன், தூக்கத்தில் உண்டாகும் பிராணன் ஆகும். இரவு அரிசி சாதத்தை ஆற வைத்து, சுடுதண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அந்த கொதிக்க வைத்த தண்ணீரை ஆற வைத்து வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் கால் பகுதி சாதமும், கால்பகுதி சுட வைத்து ஆற வைத்த தண்ணீரும் ஊற்றி, அரைப்பகுதி வெற்றிடமாக விட்டு, பாத்திரத்துக்கு மேலே மூடி விடுவார்கள்.

    இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு, அதிகாலையில் அந்த தண்ணீரை வடித்து, அதில் சிறிதளவு உப்பு போட்டு, கலக்கி குடிக்க வேண்டும். இது மனிதனின் 5 குடல்களையும் சரி செய்து, பசியை உண்டாக்கும். அப்படி உண்டாக்கிய பிறகு, நமக்கு தேவையான எந்தவித உணவையும் உண்ணலாம். அப்படி பசி உண்டாக்கும். இந்த தண்ணீர் முழு ஆரோக்கியத்தை தரும். சீரண மண்டலத்தை சீர் செய்யும். நமது உடலில் 7 விதமான தாதுக்கள் உள்ளது. இந்த 7 வித தாதுக்களில் ஒவ்வொரு தாதுவில் ஒவ்வொரு உணவாக சாப்பிடும் வகையில் உருவாக்கப்பட்டது தான் அறுசுவை உணவு.

    இந்த அறுசுவை என்பது உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகியவை. இவற்றை நாம் உணவாக உண்ணும்போது அதை ஒரே மாதிரியாக தயாரித்து உண்ணாமல், பலவிதமாக தயாரித்து உண்ணுகிறோம். கறி வகைகள், மீன் வகைகள், உணவில் சேர்த்து கொள்வது மேலும் உடலில் எலும்பு, நரம்பு. தசை, கொழுப்பு போன்றவைகளை ஈடுகட்ட தான். நமது பாரம்பரியத்தில் அந்தந்த இடத்துக்கு ஏற்ப குளத்தில், ஏரியில், ஆற்றில் உள்ள மீன்களை உண்கிறோம்.

    அதேபோல் இந்த மீன்கள் அதிகமாக கிடைக்கும் பட்சத்தில் அதில் உப்பினை கலந்து கருவாடாக்கி பல காலம் வைத்து உண்கிறோம். அப்படிப்பட்ட உணவில் இந்த மாசி மீன் மிக, மிக முக்கியமான மீன் வகை ஆகும். இதற்கு உப்பினை சேர்க்காமல் காய வைப்பது ஆகும். அதை கருவாடாக ஆக்கி வைத்தால் அது புளியங்கட்டை போல் இருக்கும். இந்த மாசி கருவாடு உண்பதால் நமது உடலில் சப்த தாதுக்களும் உண்டாகும்.

    நமது பாரம்பரியமான இந்த மாசிக்கருவாட்டை எடுத்து இடித்து உலர்த்தி, அதில் லேசாக எண்ணை அல்லது நெய் கொண்டு வறுத்து வைத்து கொள்வார்கள். இதை சட்னி, சாம்பார், வறுவல், பொறியல், கூட்டு போன்றவற்றில் சேர்த்து உண்ணலாம். திருமணமானவுடன் அந்த திருமண தம்பதியருக்கு இந்த மாசி கருவாடு உணவு ஒவ்வொரு வேளையும் கொடுக்க வேண்டும். இதனால் ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும் உடல் உறுதியையும் ஏற்படுத்துவதோடு, வாத, பித்த, சிலேத்துமத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரும்.

    ஆண், பெண் இருபாலருக்கும் திருமணமான காலத்தில் சிறப்பு உணவாக மாசிக்கருவாடை தினம் கொடுப்பர். இதனால் பெண்களுக்கு நீர்ப்பை, சினைப்பை, கருப்பை, மார்பகம், ஆகிய இந்த உறுப்புகளில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் அல்லது ஒவ்வாமை இந்த உறுப்புகளில் இருந்தாலும் வாத ஓட்டம், பித்த ஓட்டம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை சீர் செய்து, பெண்களுக்கு கரு நின்று, கருவில் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியம் தந்து, நோயில்லா குழந்தையாக, நோயை எதிர்க்கும் குழந்தையாக, ஆயுள் உள்ள குழந்தையாக பிறக்கும். திருமணமான பெண்களுக்கு தினம் மாசிக்கருவாடு கொடுப்பது நமது வழக்கில் உள்ளது.

    திருமணமான ஆண்களுக்கு மாசிக்கருவாடு உணவை தினம் கொடுப்பதற்கு காரணம் மருத்துவ குணம் தான். ஆண்குறி, விதைப்பை, விந்துப்பை, நீர்ப்பை, இவைகளை சரி செய்து உணர்ச்சி பெருக்கத்தை உண்டாக்கி, விந்து திரவத்தை உண்டாக்கி, விந்துவில் உயிரணு உண்டாக்கி, அந்த விந்துவில் உண்டாகும் கரு முழு ஆரோக்கியத்தோடும், ஆயுளோடும் இருப்பதற்கு காரணமான வாதஓட்டம், பித்த ஓட்டம், , ரத்த ஓட்டம் ஆகியவைகளில் தாழ்வை சீர் செய்து, ஆரோக்கியமான ஆண்களாக இருப்பதற்காக இந்த மாசிக்கருவாடு உணவை தினமும் கொடுப்பது நமது குடும்ப வழக்கமாகும்.

    மாசி கருவாடு இப்போது பெரும்பகுதி உணவில் சேர்த்து கொள்வது இல்லை. இதனால் உடல் நலக்கேடு உண்டாகுவதற்கு இந்த கருவாடு சமையலில் சேர்க்காதது தான். இந்த மாசி கருவாட்டில் மற்ற கருவாடுகளில் உள்ளது போன்று முள் இருக்காது. புளியங்கட்டையை அறுத்து வைத்தது போல் இருக்கும். அந்த மாசி கருவாட்டை வாங்கி அதை அப்படியே வைத்து கொள்ளலாம். எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெடாது. இந்த மாசிக்கருவாடு வீட்டில் வைத்தால் கருவாடு வாசனை வராது.

    கருவாடு உணவில் பல்வேறுபட்ட கருவாடுகள் உள்ளன. உதாரணமாக பால் சுறா கருவாடு உடம்பில் உள்ள பால் சத்தை அதிகப்படுத்தும். குழந்தை பெற்ற பெண்களுக்கு பாலை அதிகரிக்க இந்த பால் சுறா கருவாடு கொடுப்பது வழக்கம். ஆற்றில் கிடைக்கும் சிறுவகை மீன் குள்ளமாக குண்டாக இருப்பது குள்ளக்கண்டை என்று பெயர். அதேபோல் குள்ளமாகவும் சப்பையாகவும் இருப்பது குள்ளா கச்ச கருவாடு ஆகும். இந்த கருவாடு தான் குழந்தை பெற்ற பெண்கள் 9-ம் தலை குளித்த பிறகு இந்த கருவாடு குழம்பை உணவோடு கொடுப்பார்கள்.

    அப்படி கொடுக்கப்படுவது குழந்தையை பெற்ற தாய்க்கு நோய் வராமலும், நோயை வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கி ஆரோக்கிய உடலை தரும். ஒவ்வொரு கருவாடுக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கும். ஆனால் மாசி கருவாடு மூளை, இருதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், எலும்பு, நரம்பு, தசை, கொழுப்பு பலப்படுத்தும். ஆணுக்கு ஆண் விந்து, அதிகரிக்க செய்வதோடு, குறைந்து இருந்தால் அதை ஈடுகட்டும் மிகச்சிறந்த உணவு ஆகும். தென் மாவட்டங்களில் ஒவ்வொரு வீட்டிலும் இந்த உணவு சிறப்பாக இன்றும் விரும்பி சாப்பிடுகிறார்கள். நமது பாரம்பரிய உணவாக இதை இன்றும் கடைபிடித்து உண்டு வருகிறார்கள்.

    டாக்டர் கே.பி அர்ச்சுனன்,

    தலைவர், தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகாசங்கம்
    ×